ஆனால் யோனாவோ, யெகோவாவைவிட்டு ஓடி மறுதிசையிலிருக்கும் தர்ஷீசுக்குப் போகப் புறப்பட்டான். அவன் யோப்பாவுக்குப் போய் அங்கே தர்ஷீஸ் துறைமுகத்துக்குப் போகும் ஒரு கப்பலைக் கண்டான். அவன் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்தி, கப்பலேறி, யெகோவாவிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக தர்ஷீசுக்குப் பயணமானான்.
கப்பலாட்கள் எல்லோரும் பயந்து, ஒவ்வொருவனும் தன்தன் தெய்வத்தை நோக்கிக் கதறினான். அத்துடன் அவர்கள் கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக, அதிலிருந்த சரக்குகள் எல்லாவற்றையும் கடலில் எறிந்தார்கள். ஆனால் யோனாவோ, கப்பலின் அடித்தளத்திற்குச் சென்று அங்கே படுத்து ஆழ்ந்த நித்திரையாயிருந்தான்.
அப்பொழுது மாலுமி அவனிடம் சென்று, “நீ எப்படி நித்திரை செய்யலாம்? எழுந்து நீயும் உன் தெய்வத்திடம் மன்றாடு; ஒருவேளை அவர் நம்மில் கவனம்கொண்டு, அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடும் என்றான்.”
அப்பொழுது கப்பலாட்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், இந்த பேராபத்திற்குக் காரணம் யார் என்று அறியச் சீட்டுப் போடுவோம் என்றார்கள்.” அவர்கள் சீட்டுப் போட்டபொழுது, அது யோனாவின் பெயருக்கு விழுந்தது.
எனவே அவர்கள் அவனிடம், “இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று இப்பொழுது நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். நீ என்ன வேலைசெய்கிறாய்? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உனது நாடு எது? நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?” எனக் கேட்டார்கள்.
அவன் தான் யெகோவாவைவிட்டு ஓடிப்போகிறவன் என்று ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருந்தான். எனவே அவர்கள் அதைப்பற்றி அறிந்ததால் மிகவும் பயந்து, நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்டார்கள்.
“என்னைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்; அப்பொழுது அது அமைதலாகும். என் குற்றத்தினாலேயே உங்கள்மேல் இப்பெரும் புயல் வந்திருக்கிறது என நான் அறிவேன்” என அவன் விடையளித்தான்.
ஆனாலும் அந்த மனிதர், கப்பலை தண்டுவலித்து கரைக்குக் கொண்டுபோகும்படி, தங்களால் இயன்றவரை முயற்சித்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. கடலோ முன்பு இருந்ததைவிட, மிக அதிகமாக கொந்தளித்துக் கொண்டேயிருந்தது.
அப்பொழுது அவர்கள் யெகோவாவிடம் வேண்டுதல்செய்து, “யெகோவாவே, இந்த மனிதனின் உயிரை எடுத்ததற்காக எங்களைச் சாகவிடாதேயும். குற்றமற்ற ஒரு மனிதனைக் கொன்றதற்கான பழியை எங்கள்மீது சுமத்தாதேயும். ஏனெனில், நீர் எப்பொழுதும் உமது விருப்பத்தின்படியே செய்திருக்கிறீர்” என அழுதார்கள்.
{#1யோனாவின் மன்றாட்டு } ஆனால் யெகோவாவோ, யோனாவை விழுங்கும்படி, ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார்; யோனா அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இரவும் பகலும் இருந்தான்.